இந்தியா இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்று (ஜனவரி 15) மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி தொடர்ந்து விளையாடிய மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சினை தங்களது பேட்டினால் நாலாப்புறமும் சிதறடித்தனர். தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் இந்திய அணியின் முதல் சதத்தைப் பதிவு செய்தார். பின்னர் அவர் 97 பந்துகளில் 116 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து விராட் கோலியுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் 38 ரன்களில் வெளியேறினார். எனினும் அபாரமாக ஆடிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 46வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.
இதற்கிடையே களமிறங்கிய கே.எல். ராகுலும் 7 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்களை எடுத்துள்ளது.
விராட் கோலி 110 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் அடித்து 166 ரன்களும், அக்சர் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனால் 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி ஒரு நாள் தொடரில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்க போராடி வருகிறது.
மோனிஷா
’நாட்டு நாட்டு’க்கு இன்ஸ்பிரேஷன்? : நடன இயக்குநர் கொடுத்த ஆச்சரிய பதில்
கடுங்குளிர் : காஷ்மீர் போல் காட்சிதரும் உதகை!