19- வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி இன்று (பிப்ரவரி 2) இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. india vs south africa
மலேசியா கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானத்தில், ஜூனியர் பெண்கள் டி20 உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. india vs south africa

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி நடையை கட்டினர். முதல் 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மிகே வன் வூர்ஸ்ட் 23 ரன்களும், ஜெம்மா போத்தா 16 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்திய அணியில் கொங்கடி த்ரிஷா மூன்று விக்கெட்டுகளும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா, பருணிகா சிசோடியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். india vs south africa

83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் இந்திய அணியில் காமினி, கொங்கடி த்ரிஷா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
காமினி 8 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய சானிகா சல்கே, கொங்கடி த்ரிஷா இணை நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 84 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணியில் கொங்கடி த்ரிஷா 44 ரன்களும், சானிகா சல்கே 26 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த தொடரில் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கொங்கடி த்ரிஷா ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருதுகளை வென்றார்.
2023-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஜூனியர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.