மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட்போட்டியில் கலந்துகொள்ள சென்றிருப்பதால், ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் விளையாடி வருகிறது.
லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று தொடரில் சமநிலையில் இருந்தன.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 11) டெல்லியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியினர், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
அந்த அணியில் க்ளாசென் மட்டும் 34 ரன்கள் எடுத்தார். அடுத்த துவக்க பேட்டரான மலன் 15 ரன்களும், ஜான்சன் 14 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் நடையைக் கட்டினர்.
இதனால் அந்த அணி, 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷஹ்பஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. இதையடுத்து கேப்டன் ஷிகார் தவானும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
14 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்த தவான் நடையைக் கட்டினார். அடுத்து, சுப்மான் கில்லுடன் இணைந்த இசான் கிசான் 18 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கில்லுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்த்தார்.
அவர்கள் இருவரும், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். வெற்றி இலக்கைத் தொட 3 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் எதிர்பாராதவிதமாக சுப்மான் கில் அவுட்டானார். அதுவும் 1 ரன்னில் அவர் அரை சதத்தை இழந்தார். அவர், 57 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார்.
அவருக்குப் பின் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவர், 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை தித்திப்பாய் முடித்துவைத்தார்.
இந்தியா 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்தியா 99 ரன்களில் இருந்தபோது ஸ்ரேயாஸ் சிக்ஸர் அடித்து வெற்றிக்கனியைப் பறித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் இமாத் ஃபோர்ட்வின் மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது. ஏற்கெனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவ்வணிக்கு எதிரான டி20 கோப்பையையும் வென்று கொடுத்திருந்தது.
ஜெ.பிரகாஷ்
டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் யார் யார்? கிரிஸ் கெயில் கணிப்பு!
3வது ஒருநாள் போட்டி: இந்திய பவுலர்கள் அசத்தல்!