இந்தியா-பாகிஸ்தான் போட்டி: தடை ஏற்பட வாய்ப்பு!

விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டம் மழையினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மெல்போர்னில் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்காக ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்திய அணி வீரர்கள் மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். அதில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் மேற்கு ஆஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தது.

நேற்று(அக்டோபர் 19) நான்காவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாகப் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், இந்தியா-நியூசிலாந்து, வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்களும் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12சுற்றில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதி ஆஸ்திரேலியா நேரப்படி இரவு 7 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் தொடங்குகின்றன.

அன்றைய தினம் மெல்போர்னில் மழை பெய்ய 90% வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 முதல் 25 மி.மீ. மழை பெய்யும் எனக் கூறப்படுவதால் பரபரப்பான ஆட்டத்தைக் காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தியாகவே உள்ளது.

மேலும் அன்றைய தினம் போட்டிகள் நடைபெறுமா, தடைபடுமா என்ற கேள்வியோடு எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

மோனிஷா

பாம்பன் பாலம்: 10 நாட்களில் இரண்டாவது விபத்து!

திமுக அரசைக் கண்டித்து அண்ணாமலை ஆர்ப்பாட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *