கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த, இந்தியா – பாகிஸ்தான் மோதல், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக்டோபர் 14) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியை நேரில் காண, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உட்பட்ட இந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் அகமதாபாத் விரைந்துள்ளனர். மேலும், போட்டிக்கு முன்னதாக அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன், சுக்விந்தர் சிங் ஆகியோர் அடங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றுக்கும் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் அபார வெற்றி பெற்று, இந்தியா புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
அதேபோல, நெதர்லாந்துக்கு எதிராக அபார வெற்றி, இலங்கைக்கு எதிராக புதிய வரலாறு என, விளையாடிய 2 போட்டிகளும் வென்றுள்ள பாகிஸ்தான், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இதுவரை, உலகக்கோப்பை தொடர்களில் இந்த 2 அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 7 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
எனவே, அந்த ஆதிக்கத்தை தொடரும் நோக்கில் இந்தியாவும், முதல் முறையாக இந்தியாவை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தானும் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளன.
இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சுப்மன் கில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட 99% தயாராக உள்ளதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.
இதன்மூலம், இஷான் கிஷனுக்கு பதில் கில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷர்துல் தாகூருக்கு பதிலாக முதல் 2 போட்டிகளில் விளையாடாத ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்
பாகிஸ்தானின் எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
அதே போல, முதல் 2 போட்டிகளில் சோபிக்காத இமாம்-உல்-ஹக்குக்கு பதிலாக ஃபகர் ஜமான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11: அப்துல்லா சபீக், ஃபகர் ஜமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகார் அகமது, சதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அப்ரிதி, ஹாரிஸ் ராஃப்
மழை பாதிப்பு இருக்குமா?
அகமதாபாத்தில் இன்று தெளிவான வானத்துடன் வறண்ட வானிலையே நிலவும் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது. மேலும், அந்த பகுதியில் இன்று 37 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்றைய போட்டி முதலில் பந்துவீச வரும் அணிக்கு சவாலானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
INDvsPAK: தோல்வியையே சந்திக்காத இந்தியா… 8வது முறை பாகிஸ்தானை வீழ்த்துமா?
லியோ ‘ஐ மேக்ஸ்’ காட்சி ரத்து: ரசிகர்கள் ஷாக்!