ஆசியக்கோப்பை: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான்!

விளையாட்டு

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுப் பிரிவில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

ஆசியக் கோப்பையின் அடுத்தகட்ட பிரிவான சூப்பர் 4 சுற்றில் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 4) மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான், இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தலா 28 ரன்களில் ஆட்டமிழக்க, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் புயல் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர்.

விராட் கோலி நிதான ஆட்டத்தை கைப்பிடிக்க, சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் களமிறங்கிய தீபக் ஹூடாவும் 16 ரன்களில் வெளியேறினார். 36 பந்துகளில் அரைசதம் அடித்த விராட்கோலி, 60 ரன்களில் ரன் அவுட்டானார். அவர், இந்தத் தொடரில் அடித்த இரண்டாவது அரைசதம் ஆகும். இதன்மூலம் அவர்மீதிருந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. பின்னர், 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் ஆகியோர் நிதானமாய் விளையாடினர். ஆனாலும், பாபர் ஆசம் 14 ரன்களில் நடையைக் கட்டினார்.

அவருக்குப் பின் களமிறங்கிய ஃபக்தர் சமாம் 15 ரன்களில் வெளியேறினார். என்றாலும் முகமது ரிஸ்வான் மற்றும் நவாஸ் இணை ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. தொடர்ந்து போராடிய இந்திய அணி, நவாஸை 42 ரன்களிலும், ரிஸ்வானை 71 ரன்களிலும் பிரித்தது. இதைத் தொடர்ந்து ஆசிப் அலி 16 ரன்களில் 19வது ஓவரில் ஆட்டமிழந்தததும் ஆட்டம் பரபரப்பானது. இறுதியில் குஷ்தில் ஷா, ஃப்க்தார் அகம்மது இணை 19.5 ஓவர் முடிவில் 182 ரன்களை எடுத்தது. இதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வென்றது.
இந்தத் தொடரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்றிருந்த இந்திய அணியை, தற்போது அவ்வணி பழிதீர்த்திருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.