உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரையொட்டி ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் போட்டிகளாகவும், டி20 உலகக்கோப்பை தொடரையொட்டி 20 ஓவர் போட்டிகளாகவும் ‘ஆசிய கோப்பை தொடர்’ நடத்தப்படுவது வழக்கம்.
இந்தியாவில் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள சூழலில் ‘ஆசிய கோப்பை தொடர்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கியது. இது செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
இந்நிலையில் , நாளை (செப்டம்பர் 2) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் பல்லக்கேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
பல்லக்கேல் மைதானம்
கடந்த 2009 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானத்தில் 35,000 ரசிகர்கள் அமரலாம். இதுவரை 33 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் களமிறங்கிய இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது.
குறிப்பாக 3 போட்டிகளிலும் இலங்கையை எதிர்கொண்டு வென்ற இந்தியா இப்போது தான் இங்கே முதல் முறையாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இங்கு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.
இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக ரோகித் சர்மா உள்ளார். அதன்படி அவர், 182 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அதிகபட்ச ஸ்கோர் 124* ரன்கள்.
இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (9) மற்றும் ஒரு போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலராக (5/27) ஜஸ்பிரித் பும்ரா உள்ளார்.
இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர், 294/7 – இலங்கைக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு.
பிட்ச் ரிப்போர்ட்
இம்மைதானம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது.
இருப்பினும் சமீபத்திய இலங்கை பிரீமியர் லீக் தொடர் உட்பட சமீப காலங்களில் இங்கு பவுலர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் சராசரி இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ஆகும். மேலும் இங்கு நடைபெற்ற 33 போட்டிகளில் 18 முறை சேசிங் செய்த அணிகளும் 14 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரஜினியை தொடர்ந்து நெல்சனை சர்ப்ரைஸ் செய்த கலாநிதி மாறன்
ஒரே நாடு… ஒரே தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி போடும் கணக்கு!