இந்தியா – நியூசிலாந்து அணி இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (நவம்பர் 18) மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
டி20 தொடர் போட்டியை ஹர்தீக் பாண்ட்யா வழிநடத்துகிறார்.
ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்துகிறார்.
டி20 போட்டிகள் இன்று (நவம்பர் 18) தொடங்கி நவம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.
இந்திய அணி
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் படை களமிறங்குகிறது.
இந்திய அணியில், சுப்மன் கில், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேட்ச்), ரிஷப் பந்த்(வ), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்,
அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் போட்டி ரத்து
டி20 தொடரின் முதல் போட்டி இன்று மதியம் 12 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் போட்டி நடைபெறும் வெலிங்டன் நகரில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நியூசிலாந்து வானிலை அறிக்கை அறிவித்திருந்தது.
இந்நிலையில் வெலிங்டன் நகரில் பெய்து வரும் கனமழையால் தாமதமாக டாஸ் போடப்பட்டு பின்னர் தொடர்ந்து போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக டாஸ் கூட போடாமல் இன்று நடைபெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெறும் அணி கோப்பை தட்டிச் செல்லும்.
அப்படி இல்லையென்றால், 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
நியூசிலாந்து, இந்தியா ஆகிய இரண்டு அணிகளுமே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறிய அணிகள்.
எனவே சம பலம் வாய்ந்த இந்த 2 அணிகளில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றப் போவது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில்,
போட்டி கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் டி 20 கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் 11-ல் இந்தியாவும், 9ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.
மோனிஷா
வினாத்தாள் குளறுபடி : அடுத்த தேர்வு எப்போது?
விரைவில் அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் அறிவிப்பு!