நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 234 ரன்களை குவித்துள்ளது.
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியின் மூலம் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி கேள்விக் குறியானது.
இதனால் அடுத்தடுத்து நடைபெறும் டி20 போட்டியில் தங்களது முழு பலத்தை காண்பிக்க வேண்டும் என்று இந்திய அணி உறுதியாக இருந்தது.
தொடர்ந்து ஜனவரி 29 ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது இந்திய அணி. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி அகமாதாபாத்தில் உள்ள மோடி விளையாட்டு அரங்கில் இன்று (பிப்ரவரி 1) நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
இஷான் கிஷன் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது, இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருந்த இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்து வந்ததோடு சதம் அடித்து அசத்தினார்.
இதற்கிடையே இந்திய அணியில், ராகுல் திரிபாதி 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களும், தீபக் ஹூடா 2 ரன்களும் எடுத்திருந்தனர்.
எனினும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார் சுப்மன் கில். இதன்மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட்கோலியின்(122*) சாதனையை முறியடித்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களை குவித்துள்ளது. இதனால் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
மோனிஷா
2023 பட்ஜெட்: தமிழகத்திற்கு திருக்குறள் கூட இல்லை – எம்.பி. ஜோதிமணி
பழைய மற்றும் புதிய வருமான வரி அடுக்கு : செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?