இங்கிலாந்திற்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளிலும், விராட் கோலி இடம்பெற மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 2 போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று, 1-1 என சமநிலையில் உள்ளது.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, 3-வது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 15 அன்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பு மைதானத்தில் துவங்கவுள்ளது.
அதை தொடர்ந்து, பிப்ரவரி 23 அன்று ராஞ்சியில் 4-வது போட்டியும், மார்ச் 7 அன்று தர்மசாலாவில் 5-வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த 3 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
முன்னதாக, சில தனிப்பட்ட காரணங்களால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி, மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகவுள்ளார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
சில தனிப்பட்ட காரணங்களால் கோலியால் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்றும், அவரது முடிவை மதிப்பதாகவும் பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அதேபோல, காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயரும் அணியில் இடம்பெறவில்லை.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (C), ஜஸ்பிரிட் பும்ரா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜுரல் (WK), கே.எஸ்.பரத் (WK), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.
இவர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரணமாக மருத்துவ பிசிசிஐ-யின் கண்காணிப்பில் உள்ள நிலையில், அவர்கள் ஒப்புதலுக்கு பிறகே போட்டியில் பங்கேற்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதரஸா இடிப்பு: கலவரத்தில் 6 பேர் சுட்டுக்கொலை… 3வது நாளில் நிலைமை என்ன?
உதயநிதி, சபரீசன் ஆசி பெற்ற மாநாட்டுக்கு போலீஸ் தடை! கொங்கு ரியல் நிலவரம்!