வங்கதேச டெஸ்ட்: ஏமாற்றிய சீனியர் இந்திய வீரர்கள்!

விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 278 ரன்கள் எடுத்துள்ளது.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ்வணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முன்னதாக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் இன்று (டிசம்பர் 14) தொடங்கியது.

கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணிக்கு தலைமை தாங்கினார். அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து, கேப்டன் கே.எல்.ராகுலும் சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இதில் ராகுல் 22 ரன்களிலும், சுப்மான் கில் 20 ரன்களிலும் வெளியேறினர்.

முன்னாள் கேப்டனான விராட் கோலியோ 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கினார்.

india vs bangladesh first test match

அதேநேரத்தில் புஜாராவும், ரிஷாப் பண்ட்டும் பொறுப்புணர்ந்து விளையாட ஆரம்பித்தனர்.

அதன் பலனாக புஜாரா 203 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் எடுத்து தயுசூல் இஸ்லாம் பந்துவீச்சில் போல்டானார்.

ரிஷாப் பண்ட்டும் 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து மெஹிடி ஹசன் பந்துவீச்சில் போல்டானார்.

ரிஷாப், முதல் இன்னிங்ஸில் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், டெஸ்டில் அதிவிரைவாக, 50 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர், 54 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியுள்ளார்.

அவருக்குப் பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நிலையான ஆட்டத்தைத் தர, அக்ஸர் படேல் 14 ரன்களில் நடையைக் கட்டினார். ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 169 பந்துகளில் 82 ரன்கள் எடுத்துள்ளார்.

இன்றைய முதல் நாளில் முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 4 விக்கெட்கள் உள்ளன. நாளை இரண்டாம் நாள் ஆட்டம் தொடர இருக்கிறது.

வங்கதேச அணியில் தயுசூல் இஸ்லாம் 3 விக்கெட்களையும், மெஹிடி ஹசன் 2 விக்கெட்களையும் அகமது 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஜெ.பிரகாஷ்

டெல்லி எய்ம்ஸ் ஹேக்கர்: சீனாவின் சதியை முறியடித்த மத்திய அரசு!

தந்தையைப் போலவே முதல் போட்டியில் சதமடித்த டெண்டுல்கர் மகன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *