பார்டர் கவாஸ்கர் டெஸ்ட்: அனல் பறக்கவிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்!

விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கவுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (பிப்ரவரி 9) தொடங்குகிறது.

உலக தரவரிசையிலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலிலும் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதும் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைய இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான தொடராகவும் அமைந்திருக்கிறது என்பதால் இரண்டு அணிகளுமே வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்திய அணி கடைசியாக நடைபெற்ற 15 டெஸ்ட் தொடர்களை வரிசையாக வென்று சாதித்து வருகிறது. அதிலும் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு பலம் அதிகம்.

இந்த பலத்தைப் பயன்படுத்தி இந்தியா தன்னுடைய சாதனை வரிசையில் பார்டர் கவாஸ்கர் தொடரையும் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

india vs australia border gavaskar

பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா, ரோகித் ஷர்மா உள்ளிட்டோர் அதிக ரன்களை குவிக்க வாய்ப்புள்ளது. இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதால் அவருக்கு பதிலாக கே.எஸ்.பரத் இறங்க உள்ளார். இந்த பேட்டிங் வரிசையில், 5வது இடத்தில் இருப்பவர் சூர்யகுமார் யாதவா? சுப்மன் கில்லா? என்பதில் ரகசியம் நீடித்து வருகிறது.

நாக்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. அஷ்வினை தவிர்த்து ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் பந்து வீச உள்ளனர்.

அதுமட்டுமின்றி அஷ்வின் சுழற்பந்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஆஸ்திரேலியா, அவரை போலவே பந்துவீசும் ஒரு வீரரை வைத்து பயிற்சி எடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணியில், ஸ்டீவ் சுமித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், வார்னர் என்று ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

india vs australia border gavaskar

இதில் கவாஜா, லபுஸ்சேன், ஹெட் ஆகியோர் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஆடப்போவது இதுவே முதல்முறையாகும். இதே போல் பந்துவீச்சில் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், அனுபவ சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் நிச்சயம் கடும் சவாலாக இருப்பார்கள். பார்ப்பதற்கு ஆஸ்திரேலியா எல்லா வகையிலும் வலுவாகத் தென்படுவதால் இந்த தொடர் நிச்சயம் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.

இதுவரை 26 ஆண்டுகளில், 15 முறை நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்தியா இதுவரை இந்தியா 9 முறையும், ஆஸ்திரேலியா 5 முறையும் கோப்பையை வென்றுள்ளது. 1 முறை ஆட்டம் டிராவில் முடிந்து கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதில் இந்திய மண்ணில் ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலியா கோப்பை வென்றுள்ளது. அதிலும் குறிப்பாக 2004 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலியா தொடரை வென்றதில்லை. எனவே இம்முறை தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியோடு ஆஸ்திரேலியாவும், தன்னுடைய வெற்றி பட்டியலில் 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இந்தியாவும் களமிறங்கவுள்ளன.

மோனிஷா

கட்டம் கட்டப்பட்ட அமைச்சர் நாசர்  மகன்: ஸ்டாலின் வீசிய முதல் சாட்டை!

9 மாதங்களில் ரூ.9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *