ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் சுருண்ட இந்திய அணி!
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று (மார்ச் 19 ) நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய சுப்மன் கில், ரோகித் சர்மா ஜோடி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தொடக்கத்தை அளித்தது.
சுப்மன் கில் ஒரு ஷாட் ஆடி பாயிண்டில் நின்ற பீல்டரிடம் கேட்ச்சாகி டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, வெளியே சென்ற பந்தை டிரைவ் செய்ய, அது சிலிப்பில் நின்ற ஃபீல்டரிடம் கேட்சாக பிடிப்பட்டது. இதனால் ரோகித் 13 ரன்களில் வெளியேறினார்.
அதன் பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் 32 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடிய நிலையில், ராகுல், கோலி ஜோடி அணியை காப்பாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கே.எல்.ராகுலும் 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
இதன் பிறகு ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. ஆனால் அவர் வெறும் 3 பந்துகளை கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், சீன் அபோட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சதுரகிரி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!
இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!