இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி, இன்று (ஜனவரி 11) மொஹாலியில் துவங்கவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்பதற்காக, இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான 19 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
அந்த அணியில், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கானும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரஷீத் கான், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை.
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத அவர், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக்கிலும் பங்கேற்கவில்லை. அதை தொடர்ந்து, ஜனவரி 10 அன்று துவங்கிய தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் இருந்தும் விலகினார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் விலகியுள்ளது, ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய ஆப்கான் அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரான்,
“ரஷீத் கான் இல்லாதது எங்களுக்கு பெரும் பின்னடைவே, ஏனென்றால் போட்டியில் அவரது அனுபவம் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், இது கிரிக்கெட், நீங்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும்”, என தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷீத் கான் தற்போது ஆப்கானிஸ்தான் அணியுடனே பயணிப்பதாகவும், ஆனால் போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு அவர் இன்னும் உடற்தகுதி பெறவில்லை என்றும் இப்ராஹிம் சத்ரான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு, பிப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
அதை தொடர்ந்து, மார்ச் மாதத்தில் அயர்லாந்துடனும் 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்த தொடர்களில் ரஷீத் கான் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கிழங்கான் மீன் வறுவல்
IND vs AFG: முதல் போட்டியில் விராட் கோலி இல்லை: டிராவிட் அதிர்ச்சி தகவல்!
முடிந்தது ஷூட்டிங் : லேட்டஸ்ட் கங்குவா லுக் வெளியிட்ட சூர்யா