India thrashes Pakistan by 4-0 in Hockey

HACT2023: அனல் பறந்த ஆட்டம்… பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!

விளையாட்டு

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆம் தேதி தொடங்கி இதுவரை மொத்தம் 14 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 3 வெற்றி, 1 டிரா என ஒரு போட்டியில் கூட தோல்வியே சந்திக்காத இந்திய அணியும், மற்றொரு பலம் வாய்ந்த அணியான மலேசியாவும் அரையிறுதிக்கு கெத்தாக ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளன.

அதே வேளையில், நடப்பு சாம்பியன் தென்கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய அணிகள் அடுத்த 4 இடங்களை பிடித்தன.

அரை இறுதியில் நுழைவதற்கான எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் தென் கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய 3 அணிகளும் இருந்த நிலையில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்ப்ட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.

எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியை சென்னை ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து தொடங்கி வைத்தார். அவருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியை கண்டு ரசித்தனர்.

போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பாகிஸ்தான் அணி தனது முதல் கோலை அடித்தது. ஆனால் இந்திய அணி உடனடியாக ரிவ்யூ கேட்டதால் கோல் திரும்பப் பெறப்பட்டது.

இதனால் இந்திய அணி உற்சாகமான நிலையில், 15வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் இந்த போட்டியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 23வது நிமிடத்தில் மீண்டும் ஹர்மன் ப்ரீத் சிங் அடித்த கோலால் முதல்பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் இந்தியா அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் இந்திய வீர்ர்கள் ஜக்ராஜ் சிங்கும், 55வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங்கும் கோல் அடித்து அசத்தினர்.

இந்திய அணியின் தற்காப்பை உடைத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் பதில் கோல் அடிக்க கடைசிவரை போராடியும் முடியவில்லை.

இதனால் களத்தில் பரம வைரியான பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை ருசித்துள்ளது.

போட்டியில் 2 கோல் அடித்து வெற்றிக்கு உதவிய இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் ஆட்டநாயகனாகவும், பிரசாத் விவேக் சாகர் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் வெற்றியின் மூலம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா – ஜப்பான் அணிகளும், நடப்பு சாம்பியன் தென்கொரியா – மலேசியா அணிகளும் சந்திக்கின்றன.

அதே நாளில் நடைபெறும் கடைசி 2 இடங்களுக்கான போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

கிறிஸ்டோபர் ஜெமா

ICC WorldCup 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டி தேதியில் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: ‌ED போட்ட கிடுக்கிப் பிடி… என்ன சொன்னார் செந்தில் பாலாஜி?

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *