ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2வது பிங் பால் டெஸ்ட் எனப்படும் பகலிரவு போட்டி அடிலெய்டில் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடந்த போட்டியில் சதம் விளாசிய ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் மிச்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்து அதிரடி சதம் விளாசினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜெய்ஸ்வால் (24), விராட் கோலி (11), கேப்டன் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (28) என அடுத்தடுத்து அவுட் ஆகினர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளுக்கு 128 ரன்கள் மட்டுமே ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று தொடங்கிய 3வது நாள் ஆட்டத்தில் முதல் விக்கெட்டாக 28 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் ரிஷப் பண்ட். தொடர்ந்து அஸ்வின் (7), ஹர்சித் ராணா (0), நிதிஷ் குமார் ரெட்டி (42). கடைசியில் சிராஜும் (7 ரன்) நடையை கட்ட இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
வெற்றி பெற வெறும் 19 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.
இதன்மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

அதிரடி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருது பெற்றார்,
இந்த படுதோல்வியின் மூலம் , உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு இந்திய அணி சரிந்தது. 3வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்கா 2வது இடத்தில் தொடர்கிறது.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன்கள் என்ற மோசமான பட்டியலில் எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோரை சமன் செய்து 3வது இடத்தை பகிர்ந்துள்ளார் ரோஹித் ஷர்மா. முதல் இரண்டு இடங்களில் பட்டோடி (6), சச்சின் (5) ஆகியோர் உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா