4வது டெஸ்ட்: சாதனை சதம் கண்ட கவாஜா… தடுமாறும் இந்தியா

விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளுக்கு 255 ரன்களை குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரில் முன்னிலை பெற்றது இந்திய அணி. இந்தூரில் நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணியும் தகுதி பெற கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட்(32) விக்கெட்டை கைப்பற்றி அஸ்வின் இந்த ஜோடியை பிரித்தார்.

அவரைத்தொடர்ந்து, லபுசேன் 3 ரன்னில் ஷமி வேகத்தில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கவாஜா – ஸ்மித் ஜோடி சுமார் 40 ஓவர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தியது.

உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்தில் 135 பந்துகளில் 38 ரன்கள் அடித்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் முகமது சமி பந்து வீச்சில் வெளியேறினார்.

எனினும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா முதல்நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து சதம் கடந்தார்.

இதன்மூலம் இந்திய மண்ணில் கடந்த 13 வருடங்களுக்கு பிறகு சதமடித்த ஆஸ்திரேலியா இடதுகை பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. கவாஜா 104 ரன்னிலும் கீரின் 49 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசிவரை போராடியும் முடியாமல் திணறினர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பொட்டு வைக்க மாட்டியா?: பொது இடத்தில் பெண்ணிடம் கத்திய பாஜக எம்.பி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: களமிறங்குவது யார் யார்?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *