ஆசிய கோப்பை 2023: பைனலுக்கு முன்பாக இந்தியாவுக்கு அதிர்ச்சி

Published On:

| By christopher

2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இன்று (செப்டம்பர் 17) மோதவுள்ளன. இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் மதியம் 3 மணிக்கு துவங்கவுள்ளது.

இந்நிலையில், இந்தியா vs வங்கதேசம் ஆட்டத்தின்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய அணியின் நட்சத்திர வீரர் அக்சர் பட்டேல் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு பதிலாக, வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) அறிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்சனாவும் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனால், 2 அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் பலப்பரீட்சையானதாக அமைய உள்ளது.

மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

இந்த 2023 ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. சூப்பர் 4 சுற்றில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்ற இந்தியா, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆனால், தனது கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், வங்கதேச அணிக்கு எதிராக இளம் அணியை கொண்டு விளையாடிய இந்தியா, கடைசி வரை போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்த தோல்வியில் இருந்து மீண்டு இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை, 15 முறை இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன. இதன் காரணமாக, இன்றைய போட்டியில் 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி, ஆசிய கோப்பை தொடர்களில் தனது ஆதிக்கத்தை இந்தியா மீண்டும் நிலைநாட்டுமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

முரளி

சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!

ரஷ்யாவில் அணு ஆயுத விமானங்களை ஆய்வு செய்த கிம் ஜாங் உன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share