இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
இந்தியா – இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஜனவரி 3) நடைபெற்றது.
ஓய்வு காரணமாக சீனியர் வீரர்களான ரோகித், கோலி, ராகுல் ஆகியோரும், காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த போட்டியில் இடம்பெறவில்லை.
அதே வேளையில் இஷான் கிஷான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், தீபக் ஹுடா, ஷிவம் மாவி, உம்ரான் மாலிக் ஆகியோர் அடங்கிய இளம் படையுடன் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்த போட்டியில் களம் கண்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பேட்டிங் செய்ய தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சொதப்பிய ’சு.சூ.ச’ வீரர்கள்
ஆரம்பம் முதலே இஷான் கிஷன் அதிரடியில் இறங்கியதால் முதல் 2 ஓவர்களில் 26 ரன்கள் குவித்தது இந்திய அணி. ஆனால் அடுத்த ஓவரிலேயே சுப்மன் கில் (7) தீக்ஷனா சுழலில் எல்பிடபில்யூ ஆகி வெளியேறினார்.
அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ்(7) மற்றும் சஞ்சு சாம்சன்(5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினர். சிறிது நேரத்தில் நன்றாக விளையாடி வந்த இஷான் கிஷனும் (37) ஹசரங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக விளையாட அணியின் ரன்வேகம் மெல்ல உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 90ஐ கடந்த நிலையில் 14வது ஓவரில் ஹர்திக் பாண்டியா (29) மதுஷன்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
100 ரன்களை கடப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி 150 ரன்களை கடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது.

ஹூடா – அக்சர் பட்டேல் அதிரடி
எனினும் 6வது விக்கெட்டுக்கு இணைந்த ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் கடைசி நேரத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர்.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
தீபக் ஹூடா 4 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களும், அக்சர் பட்டேல் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி தரப்பில், தக்ஷீனா, மதுஷன்கா, கருணாரத்னே, ஹசரங்கா, டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
சீட்டுக்கட்டாய் சரிந்த இலங்கை அணி
இந்நிலையில், 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், ஆரம்பமே இலங்கைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் நிசங்கா 3 பந்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஷிவம் மாவி பந்தில் போல்ட் ஆனார். அடுத்து களமிறங்கிய தனஞ்ஜெய டி சில்வா 8 ரன்னில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து அடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் சீரான இடைவெளியில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
உச்சகட்ட பரபரப்பில் கடைசி ஓவர்
எனினும் கடைசி ஓவரில் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருக்க இலங்கை அணி 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் அக்ஷர் பட்டேல் பந்துவீசினார்.
முதல் 3 பந்திலேயே 1(wd), 1, 0, 6 என 8 ரன்கள் அவர் கொடுக்க, இந்திய அணி ரசிகர்களின் சத்தமின்றி மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது.
எனினும் அடுத்த மூன்று பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மேலும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் ரன் அவுட் முறையில் பறிகொடுத்து 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி.
இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது.
இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியிலேயே அபாரமாக பந்துவீசிய ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரன் மாலிக் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதிரடியாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய தீபக் ஹூடா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியானது புனேவில் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் : புகார் தெரிவிப்பது எப்படி?