டி20 உலக கோப்பை : சாதனை படைக்கும் இந்தியா – பாகிஸ்தான்!

விளையாட்டு

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தின் டிக்கெட்கள் அனைத்தும் 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தது.

இந்நிலையில் நின்று பார்ப்பதற்காக இன்று ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 ஆயிரம் கூடுதல் டிக்கெட்டுகளும் சில மணி நேரங்களில் விற்பனையாகி உள்ளன.

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

அதில் சூப்பர் 12 சுற்றின் 2வது பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி அக்டோபர் 23ம் தேதி மெல்போர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் எப்போதும் அனல் பறக்கும்.

india pakistan match ticket

ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய 7 முறையும் இந்திய அணியே வென்றுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் 6 முறை இரு அணிகளும் மோதிய நிலையில், 5 முறை இந்திய அணி வென்றுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதன்முறையாக இந்திய அணியை பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

india pakistan match ticket

5 நிமிடங்களில் டிக்கெட் விற்பனை!

இந்நிலையில் அக்டோபர் 23ம் தேதி நடக்க இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் தொடங்கிய 5 நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய சுற்றுலா கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இரு அணிகளின் ஆயிரக்கணக்கான் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இதனையடுத்து ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்கவும், வருவாய் பார்க்கவும் போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்தனர்.

கூடுதல் டிக்கெட்டுகளும் விற்பனை!

அதன்படி இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டங்களுக்கு உள்ள வரவேற்பு காரணமாக ஐசிசி அனுமதியுடன் கூடுதலாக 4 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அந்த டிக்கெட்களை வாங்குபவர்கள் நின்று கொண்டுதான் போட்டியை பார்க்க முடியும். இதற்கான டிக்கெட் விலையாக இந்திய மதிப்பில் சிறுவர்களுக்கு 280 ரூபாயும், பெரியவர்களுக்கு 1600 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 4000 டிக்கெட்டுகளும் ரசிகர்களால் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்துள்ளன.

புதிய சாதனை படைக்க வாய்ப்பு!

உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படும் மெல்போர்ன் 1 லட்சம் இருக்கைகள் வசதி கொண்டது. 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 93,013 ரசிகர்கள் நேரிடையாக கண்டது சாதனையாக உள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 23ம் தேதி நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டியில் அதனை விட கூடுதலான ரசிகர்கள் நேரில் கண்டு புதிய சாதனை படைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

அதேவேளையில் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆசியக் கோப்பை டி 20 கிரிக்கெட் தொடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0