சாம்பியன்ஸ் டிராபி : ஜெர்சியில் கூட பாகிஸ்தான் பெயர் இடம் பெறாது?- பிசிசிஐ முடிவால் குமுறும் பிசிபி

Published On:

| By Kumaresan M

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய அணியை அனுப்ப பி.சி.சி.ஐ மறுத்து விட்டதால், இந்திய ஆட்டங்கள் மட்டும் பொது இடமான துபாயில் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மற்றொரு அதிர்ச்சி தகவலும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை குமுற வைத்துள்ளது. வழக்கமாக போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் அந்த அந்த அணி வீரர்கள் அணியும் ஜெர்சியில் இடம் பெற்றிருக்கும். ஆனால், துபாயில் ஆடும் இந்திய அணி வீரர்களின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்படாது என்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிகாரி ஒருவர் நியூஸ் 18 சேனலிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்து விட்டது. தொடக்க விழாவில் பங்கேற்க கேப்டனையும் அனுப்பவில்லை. இப்போது, ஜெர்சியில் பாகிஸ்தான் நாட்டின் பெயரும் இடம் பெறாது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஐ.சி.சி எங்களுக்கு ஆதரவாக நிற்கும். பிசிசிஐ – யின் எண்ணம் நடக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிப்ரவரி 16 அல்லது 17 ஆம் தேதிகளில் பாகிஸ்தானில் நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்பார் என்று கூறப்பட்டது. தற்போது, அவரையும் அனுப்ப பிசிசிஐ மறுத்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் இந்தியா மோதுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share