IND vs NZ: பெங்களூரில் நேற்று முதல் விடாது பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (அக்டோபர் 16) இந்தியா – நியூசிலாந்து போட்டி தொடங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் உடனான தொடரை அபாரமாக கைப்பற்றியது. குறிப்பாக வங்கதேசம் உடனான 2 டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோத உள்ளது.
அதன்படி இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பெங்களூருவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களூருவுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு ஐடி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாள் மற்றும் 2 ஆம் நாளில் 70-90% இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி சின்னசாமி மைதான ஆடுகளம் தற்போது வரை கவரால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இந்தப் போட்டி நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி சின்னசாமி மைதானத்தில் சீரான மழை பெய்து வருவதால், போட்டி சரியாக எப்போது துவங்கும் என தெரியவில்லை என கள கண்காணிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : முத்துக்குமரன் vs ஜாக்குலின்… ஆண்கள் செய்வது அநீதி?
”மேம்பாலத்துல நிறுத்துன காரை எடுக்கலாம்” : சென்னை மக்களுக்கு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்!