Asian Games 2023: 100 பதக்கங்களை நெருங்கிய ‘இந்தியா’!

விளையாட்டு

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய போட்டிகளில், வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களை வெல்ல உள்ளது.

இந்த தொடரின் 13வது நாளில் மட்டும், ஒரு தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்றுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை, 24 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கல பதக்கங்களுடன், 95 ஆக உயர்ந்துள்ளது.

ஆடவர் ஹாக்கி பிரிவில், நடப்பு சாம்பியனான ஜப்பான் அணியை 5-1 என அதிரடியாக வீழ்த்திய இந்திய அணி, 9 ஆண்டுகளுக்கு பிறகு, ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் பாரிஸில் நடைபெறவுள்ள 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது.

ஆடவருக்கான பிரிட்ஜ் போட்டியில், ஜக்கி ஷிவ்தாசனி, சந்தீப் தக்ரல், ராஜேஸ்வர் திவாரி, சுமித் முகர்ஜி, ராஜு டொலானி மற்றும் அஜய் பிரபாகர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. 2018 ஆசிய போட்டிகளில், இந்த பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் வில்வித்தை ரெகர்வ் குழு பிரிவில், இந்தியாவின் அடானு தாஸ், தீரஜ் பொம்மதேவரா மற்றும் துஷார் சேல்கே அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

அதேபோல, மகளிருக்கான வில்வித்தை ரெகர்வ் குழு பிரிவில், அங்கிதா பகத், பஜன் கவுர் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

மகளிருக்கான செபக் டகரவ் விளையாட்டில், தாய்லாந்து அணியிடம் 21-10, 21-13 என தோல்வியடைந்த இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஆடவர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில், சீன வீரர் லீ ஷி பெங்கிடம் தோல்வியடைந்த எச்.எஸ்.பிரனாய், வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். 41 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக இந்த பிரிவில் எச்.எஸ்.பிரனாய் இந்தியாவுக்காக பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து, மல்யுத்த போட்டிகளில், இந்திய வீரர், வீராங்கனைகள் நாட்டுக்காக 3 வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்துள்ளனர். மகளிர் 62 கிலோ எடைப் பிரிவில், சோனம் மாலிக் வெண்கலம் வென்றுள்ளார். மகளிர் 76 கிலோ எடைப் பிரிவில், கிரண் பிஸ்னாய் வெண்கலத்தை கைப்பற்றினார். அதேபோல, ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில், அமன் ஷெராவத் வெண்கல பதக்கத்தை தன்வசமாக்கினார்.

முரளி

“அயலான்” டீசர்: சிவகார்த்திகேயனை மிரட்டும் ஏலியன்!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக மாஜிகளின் தலையெழுத்தை மாற்றும் ஆளுநரின் கையெழுத்து! 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *