இந்தியா – நியூசிலாந்து இடையே இன்று (நவம்பர் 30) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை வென்றது.
உலகக்கோப்பையை அடுத்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர் 2வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தொடரை சமன் செய்யும் முனைப்பில் 3வது ஒருநாள் போட்டியை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லே ஓவல் மைதானத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது இந்திய அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்(49) மற்றும் வாஷிங்டன் சுந்தர்(51) தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொதப்பினர்.
கடைசி விக்கெட்டாக சுந்தரும் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 47.3 ஓவரில் 219 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.
மழை பெய்வதற்கு வாய்ப்பு இருந்ததால் 220 ரன்கள் என்ற இலக்கை எட்ட ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது நியூசிலாந்து அணி.
பேட்டிங்கில் கலக்கிய தொடக்க வீரர் டெவான் கான்வே அதிரடி அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஃபின் ஆலன் 38 மற்றும் கேன் வில்லியம்சன் களத்தில் ஆடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது நியூசிலாந்து அணி 18 ஓவரில் 104 ரன்கள் அடித்திருந்தது.
எனினும் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்த நிலையில், 3வது ஒருநாள் போட்டி முடிவின்றி நிறுத்தப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 1-0 என ஒருநாள் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. தொடர்நாயகன் விருதை நியூசிலாந்து வீரர் டாம் லதாம் வென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
FIFA WorldCup : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீண்டும் கனமழை?