சச்சின், யூசுப் பதான், யுவராஜ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தியது இந்தியா லெஜண்ட்ஸ்.
இந்தியாவில் போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கிடையே லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து இலங்கை, ஆஸ்திரேலியா என உலகின் 8 நாடுகளைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான்கள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
டேராடூனில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ், இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
இதனையடுத்து முதலில் இந்திய லெஜண்ட்ஸ் அணியில் நமன் ஓஜா மற்றும் சச்சின் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஒரு முனையில் ஓஜா (20 ரன்கள்) பொறுமை காட்டினார்.
அரங்கத்தை அதிர வைத்த சச்சின்!
மறுமுனையில் விளையாடிய ஜாம்பவான் சச்சின் அதிரடியாக விளையாடினார். 20 பந்துகளில் 40 ரன்கள் குவித்த அவர் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடித்து மைதானத்தை அதிர வைத்தார்.
இதனால் உற்சாகமான ரசிகர்களும் சச்சின், சச்சின் என்று அரங்கத்தை அலறவிட்டனர்.
அவரை தொடர்ந்து வந்த யுவராஜ் 31* (15) மற்றும் யூசுப் பதான் 27 (11) ஆகியோரும் பவுண்டரி சிக்ஸர்களாக பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினர்.
15 ஓவர் முடிவில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி சொதப்பல்!
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி, இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியது.
ஒருவர் கூட 30 ரன்களை தொடாத நிலையில், பில் மஸ்டர்ட் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்கள் குவித்தார்.
15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் 49 வயதில் தான் எப்போதும் பேட்டிங்கில் கில்லி என நிரூபித்த சச்சின் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்திய வீரர்களின் ’வெயிட்’! சல்மான் பட் பளிச்!
துறைமுகங்கள் வரைவு மசோதாவில் திருத்தம் வேண்டும்: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!