முதல் டெஸ்ட் போட்டி : ரோகித், ஜடேஜா அபார பேட்டிங்… இந்தியா முன்னிலை!

விளையாட்டு

ரோகித் சர்மா சதத்தை தொடர்ந்து 8வது விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா – அக்சர் கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் ஜடேஜா – அஸ்வின் சுழல் கூட்டணியில் தாக்குபிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்களை குவித்து இருந்தது.

இந்நிலையில் 2ஆம் நாள் ஆட்டத்தை அஸ்வினுடன் இணைந்து அதிரடியாக துவங்கினார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

ரோகித் சர்மா சாதனை சதம்

ஆஸ்திரேலிய அணியின் வேகம் மற்றும் சுழற்பந்துவீச்சு என இருமுனை தாக்குதல்களையும் சிறப்பாக எதிர்கொண்ட அவர் டெஸ்ட் போட்டியில் தனது 9 சதத்தை பதிவு செய்தார்.

இந்த சதம் மூலம் தொடக்க வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 சதங்கள் அடித்திருக்கும் சச்சின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.

மேலும் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளது.

தொடர்ந்து விளையாடிய அவர், 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

பயம் காட்டிய ஆஸ்திரேலியா

ரோகித் ஒருபுறம் சதத்துடன் சாதனை படைத்தாலும் மறுபுறம் இந்தியா வீரர்களான அஸ்வின்(23), புஜாரா(7), கோலி(12), சூர்யகுமார்(8), பரத்(8) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

240 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் சீக்கிரமே முடிந்து விடும் என்று தோன்றியது.

சரிவை சரிசெய்த ஜடேஜா – அக்சர் ஜோடி

எனினும் 8வது விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா-அக்சர் பட்டேல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வேளிபடுத்தியது.

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சினை சிறப்பாக கையாண்ட இருவரும் அரைசதம் கடந்தனர்.

இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்து 144 ரன்கள் முன்னிலையுடன் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

களத்தில் 66 ரன்களுடன் ஜடேஜாவும், 52 ரன்களுடன் அக்சர் பட்டேலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக அறிமுக வீரரான டோட் முர்பி 5 விக்கெட்டுகளை எடுத்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லியான் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஒரே ஹெல்மெட்டால் மாறிய மனைவி… கர்நாடகாவில் கலகலப்பு!

பிச்சைக்காரன் 2 : ஸ்னீக் பீக் ட்ரெய்லர் வெளியீடு!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.