T20Worldcup Final : நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரன்கள் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் விராட் கோலி, இறுதிப்போட்டியில் அசத்துவார் என கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் நேற்று இரவு மோதின.
கயானாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் (57) அடித்து அசத்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்களோ, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 16.4 ஓவரில் வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகினர்.
இதனால், 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்தியா, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரோகித் நம்பிக்கை!
அதே வேளையில், முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு டி20 தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 10.71 சராசரியில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கோலியின் இந்த ஃபார்ம் குறித்து போட்டி முடிந்த பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அவர் (விராட் கோலி) ஒரு தரமான வீரர். அணியில் அவரின் முக்கியத்துவம் எங்களுக்கு நன்றாக தெரியும். 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் ஒரு வீரர் Form-ல் இருப்பதும், இல்லாமல் போவதும் ஒரு பிரச்னையே கிடையாது. ஒரு நோக்கத்துடன் உள்ளார். அவர் தனது ஆட்டத்தை இறுதிப் போட்டிக்காக கூட சேமித்து வைத்திருக்கலாம்” என்று ரோகித் சர்மா கூறினார்.
இந்த பதிலால் விராட் கோலி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பை வெல்வதற்கு இறுதிப்போட்டியில் விராட் கோலியின் பங்கு முக்கிய தேவையாக உள்ளது. அதனை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முதன்முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்துள்ள வைத்துள்ள தென்னாப்பிரிக்கா அணியை நாளை இரவு 8 மணிக்கு பார்படாஸில் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!
டெல்லி துயரம்: திடீரென இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை.. மூன்று பேர் பலி!