2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடர் கடந்த ஜூலை 26 அன்று வண்ணமயமான துவக்க விழாவுடன் துவங்கியது. இதை தொடர்ந்து, முதல் நாளான ஜூலை 27 அன்று பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகளை பங்கேற்றனர்.
முதலாவதாக, துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில், அர்ஜுன் பபுதா – ரமிதா மற்றும் இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் ஜோடிகள் பதக்கங்களை எதிர்நோக்கி களமிறங்கின.
ஆனால், தகுதி சுற்று ஆட்டத்தில், அர்ஜுன் பபுதா – ரமிதா இணை 6வது இடத்தையும், இளவேனில் வாலறிவன் – சந்தீப் சிங் இணை 12வது இடத்தையும் பிடித்து, பதக்கப் போட்டிகளுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.
இதை தொடர்ந்து, ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சரப்ஜோத் சிங், இறுதியில் 9வது இடம் பிடித்து நூலிழையில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதை தொடர்ந்து நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக திகழும் மனு பாக்கர், 580 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஒலிம்பிக்கில், துப்பாக்கி சுடுதல் மகளிர் ஒற்றையர் பிரிவில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றார்.
மனு பாக்கர் தங்கத்தை குறிவைத்து மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இன்று களமிறங்க உள்ளார். அப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு துவங்கவுள்ளது.
பேட்மின்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு குரூப் சுற்று ஆட்டத்தில், லக்சயா சென் பெல்ஜிய வீரர் ஜூலியன் கராக்கியை 21-8, 22-20 என வீழ்த்தினார். தொடர்ந்து, ஆடவர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்று ஆட்டத்தில், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த லூகஸ் கார்வே – ரோனன் லாபர் இணையை சாத்விக் – சிராக் இணை 21-17, 21-14 என வெற்றி கண்டது.
மறுபுறத்தில், மகளிர் இரட்டையர் பிரிவு குரூப் சுற்று ஆட்டத்தில், அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிராஸ்டா இணை, கொரியாவை சேர்ந்த கிம் சோ யாங் – காங் ஹீ யோங் இணையிடம் 21-18, 21-10 என தோல்வியை சந்தித்துள்ளது.
இதற்கிடையில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், தனது முதல் லீக் சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய ஆடவர் அணி 3-2 என வெற்றியுடன் 2024 ஒலிம்பிக் பயணத்தை துவங்கியுள்ளது. 2-2 என போட்டி சமனில் இருந்தபோது, கடைசி சில நிமிடங்களில் ஹர்மன்ப்ரீத் சிங் பெனால்ட்டி முறையில் கோல் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
குத்துச்சண்டை மகளிர் 54 கிலோ எடை பிரிவில், ரவுண்டு ஆஃப் 32 சுற்றில் வியட்நாமை சேர்ந்த வோ தி கிம் அன்னை இந்திய வீராங்கனை ப்ரீத்தி பவார் 5-0 என வீழ்த்தியுள்ளார்.
அதேபோல, டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் ஹர்மித் தேசாய் ஜோர்டனை சேர்ந்த சையத் அபோ யாமனை 11-7, 11-9, 11-5, 11-5 என வீழ்த்தியுள்ளார்.
மனு பாக்கரை போல, இன்று (ஜூலை 28) வில்வித்தை மகளிர் குழு பிரிவில், அங்கிதா பாக்கட், பஜன் கவுர், தீபிகா குமார் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி பதக்கத்தை நோக்கி களமிறங்க உள்ளது.
இவர்கள் மட்டுமின்றி, பேட்மின்டனில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய், டேபிள் டென்னிஸில் ஷரத் கமல், மணிகா பத்ரா உள்ளிட்டோரும் இன்று போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாம்பன் பாலப்பணிகள் நிறைவு: ரயில் போக்குவரத்து எப்போது?
இரட்டை ஜடை போடாத மாணவிகளின் முடியை வெட்டிய ஆசிரியர்கள்!
பியூட்டி டிப்ஸ்: வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்… எப்படி?
ஹெல்த் டிப்ஸ்: ஆடுசதையில் பிடிப்பா… அலட்சியம் வேண்டாம்!