முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அஸ்வின் சுழலில் சிக்கி சரிந்ததை அடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் தேதி டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் கண்டனர்.
எனினும் சிறிது நேரத்தில் ரோகித் சர்மா 103 ரன்களுக்கும், அடுத்து வந்த சுப்மன் கில் 5 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது.
இந்தியா டிக்ளேர்!
நேற்று தொடங்கிய மூன்றாம் நாளில் ஜெய்ஸ்வால் 143 மற்றும் விராட் கோலி 36 ரன்களுடனும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 171 ரன்களில் வெளியேறினார். அதேபோன்று மீண்டும் ஒரு சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 3 ரன்களில் ஆட்டமிழக்க, 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து 271 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
அஸ்வின் விக்கெட் வேட்டை!
அதன்பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை அஸ்வினும், ஜடேஜாவும் தங்களது சுழல் வித்தையால் சுழற்றி எடுத்தனர்.
டாஜநரைன் சந்தர்பாலை எல்.பி.டபிள்யூ செய்து ஜடேஜா விக்கெட் வேட்டையை துவக்கி வைக்க, அஸ்வின் தனது சுழல் பந்துவீச்சை டாப் கியருக்கு மாற்றினார்.
இதனால் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பியபடி இருந்தனர்.
முடிவில் 130 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆறாவது முறையாக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 5+ விக்கெட் எடுத்த அஸ்வின் மொத்தமாக இந்த போட்டியில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
மேலும் ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் இந்திய அணி வீரர் கும்பிளேவின் சாதனையையும் (8 முறை) அஸ்வின் சமன் செய்துள்ளார்.
தனது அறிமுக போட்டியிலேயே சர்வதேச அளவில் சதம் கண்டு, இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
இரவு பாடசாலை திட்டம்: விஜய்யின் முடிவை வரவேற்ற அன்பில் மகேஷ்
சடங்குகளில் ஏதும் அர்த்தம் உள்ளதா?