நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை போராடிய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஹைதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் இன்று (ஜனவரி 18) தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சுப்மன் கில் இரட்டைச் சதம்
தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். நல்ல தொடக்கத்தை அளித்து இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் ரோகித் ஷர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து விராட் கோலி, இஷான் கிஷன் ஆகியோரும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
இதற்கிடையே மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஓபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் சதமடித்தார்.
எனினும் மறுமுனையில் சூர்யா குமார் யாதவ் (31), மற்றும் ஹர்திக் பாண்டியா (28) தவிர வேறு யாரும் பெரிய அளவில் கில்லுக்கு துணையாக நிற்கவில்லை.
எனினும் அதிரடியால் மைதானத்தை அதிர வைத்த சுப்மன் கில் 145 பந்துகளில் 19 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் கிரிக்கெட் உலகில் ஒருநாள் போட்டிகளில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
அவரது அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் மிட்செல், ஷிப்லே தலா 2 விக்கெட்டுகளும், பெர்குசன், டிக்னர், சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அடுத்தடுத்து 6 விக்கெட்டுகள்
இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது.
எனினும் அந்த அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் டிவோன் கான்வே 10 ரன்களில் ஷ்ர்துல் தாக்கூர் வீசிய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து மற்ற முன்னணி வீரர்களும் சீரான இடைவெளியில் இந்திய அணியின் சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர்.

29 ஓவர்களில் 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தத்தளித்தது. இதனால் இந்தியாவின் வெற்றியை ரசிகர்களும் அப்போதே உறுதி செய்தனர்.
இந்தியாவை மிரட்டிய ஜோடி
எனினும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல 7வது விக்கெட்டுக்கு மிக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னர் இணைந்தனர்.
இருவரும் நிதானமாக ஆடியதோடு, தேவையான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினர். இதனால் நியூசிலாந்தின் ரன்வேகம் படிப்படியாக உயர்ந்தது.
அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய பிரேஸ்வேல் 57 பந்துகளில் சதமடித்தார். அவரை தொடர்ந்து சாண்ட்னரும் அரைசதம் கடந்தார்.
இருவரும் நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற நிலையில், 46வது ஓவரில் சாண்ட்னரின் விக்கெட் எடுத்து இந்த ஜோடியை பிரித்தார் முகமது சிராஜ்.
எனினும் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 7வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் (162) குவித்த ஜோடி என்ற பெருமையை பிரேஸ்வேல் – சாண்டனர் பெற்றனர்.
அதே ஓவரில் ஷிப்லேவையும் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் சிராஜ். எனினும் அடுத்து இறங்கிய பெர்குசன் சிறிது நேரம் துணையாக நிற்க, அடித்த பந்துகள் எல்லாம் சிக்ஸருக்கு அனுப்பி பீதியை கிளப்பி கொண்டிருந்தார் பிரேஸ்வெல்.
எனினும் 49வது ஓவரில் பெர்குசன் விக்கெட்டை எடுத்து நெருக்கடி கொடுத்தார் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா.

கடைசி ஓவர் திக்.. திக்…
இதனால் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருக்க 20 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இரு அணிகளுக்கு ப்ரஷர் ஏற, கடைசி ஓவரை வீச ஷர்துல் தாக்கூர் வந்தார்.
அவர் போட்ட முதல் பந்தினை ஸ்ட்ரைக்கில் நின்ற பிரேஸ்வெல் சிக்ஸருக்கு பறக்கவிட, மைதானத்தில் அமைதியோ அமைதி.
அடுத்த பந்து பேட்ஸ்மேன் தலைக்கு மேல் சென்று வைடாக மாற, 5 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்திய வீரர்களின் முகத்தில் பதற்றம் பற்றிக் கொண்டது.
இதனால் ஏற்பட்ட உச்சக்கட்ட நெருக்கடியிலும் ஷர்துல் தாக்கூர் வீசிய துல்லியமான யார்க்கரில் எல்.பி.டபில்யூ ஆனார் பிரேஸ்வேல்.
இதன்மூலம் 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து.
கடைசி வரை போராடிய இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தனது முதல் இரட்டை சதத்துடன் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமான இளம் வீரர் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா