உலகக் கோப்பை டி20 போட்டி தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களே இருக்கிறது. இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது.
உலகக் கோப்பையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று அனைத்து அணிகளும் தயாராகி வரும் சூழலில், இரண்டாவது உலகக் கோப்பையை எப்படியும் வென்று விட வேண்டும் என ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் களமிறங்க உள்ளது.
ஆனால், இந்த அணியில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியுள்ள நிலையில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா, மாட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவின் ஆட்டம்:
ரசிகர்களால் இந்தியாவின் ஏபிடி (ஏபிடிவில்லியர்ஸ்) என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக இருக்கிறார்.
அதனாலேயே குறுகிய காலத்தில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவர், 2022ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக அளவில் அதிக ரன்கள் (739) மற்றும் சிக்ஸர்களை (45) அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வருகிறார்.
அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் அவருடைய ஆட்டம்தான் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், “ஒருவேளை இந்த வருடம் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லுமானால் அதற்கு சூர்யகுமார் யாதவ்தான் காரணமாக இருப்பார்.
இந்திய அணியில் மிகவும் முக்கிய வீரராக இருக்கும் அவர், புதிய ஷாட்டுகளை அடிப்பவராக இருக்கிறார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே சதத்தை அடித்துள்ள அவர், சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த இன்னிங்சை விளையாடி போட்டியை வென்று கொடுத்தார்.
அதனால் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தால் 150 ரன்களை எடுக்கவேண்டிய இன்னிங்சில் அவர் நிச்சயமாக தன்னுடைய பேட்டிங்கால் 190 முதல் 200 ரன்களை எளிதாக எடுத்துக் கொடுப்பார்.
ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் 4 இடத்தில் அவர்தான் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டு உள்ளார்.
ஒருவேளை டாப் ஆர்டர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்ததாக களமிறங்கி நிலைமையை சமாளித்து இந்தியா வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை அவரால் ஏற்படுத்த முடியும்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மேயரைப் பற்றி ஆபாச வீடியோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!