இறுதிப்போட்டியில் 11 ஓவருக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இன்று (நவம்பர் 19) நடைபெற்று வரும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் 5வது ஓவரில் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதனைத்தொடர்ந்து பவர்பிளேயில் அதிரடியாக பேட்டை சுழற்றி வந்த கேப்டன் ரோகித் சர்மா, 10வது ஓவரை வீசிய மேக்ஸ்வெல் பந்தை தூக்கியடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து எட்ஜ் ஆகி பறக்க, கவர் பாயிண்டில் ஓடி சென்று பாய்ந்து பிடித்தார் டிராவிஸ் ஹெட்.
இதனால் ரோகித் சர்மா இந்தமுறையும் அரைசதம் கூட அடிக்காமல் 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதற்கு அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடப்பு உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தற்போது கோலியுடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்துள்ளார் கே.எல்.ராகுல்.
கோலி 34 ரன்களுடனும், ராகுல் 10 ரன்களுடனும் நிதானமாக விளையாடி வரும் நிலையில் இந்திய அணி 16வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை குவித்து விளையாடி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
WorldCup Final: இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கம்!
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீட்டில் குடும்பத்துடன் காணும் முதல்வர்!