2023 உலகக்கோப்பை தொடரில், அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், ‘அரையிறுதிக்கு முன்னேறப்போகும் 4 அணிகள் யார்?’ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தற்சமயத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியை தொடர்ந்து, விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2வது இடத்தில் உள்ளது.
இந்த தொடரில் விளையாடிய 5 போட்டிகளில் 4ல் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை, இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
இந்த தொடரில் இன்னும் 4 போட்டிகளே மீதமுள்ள நிலையில், அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.
இந்த ஆட்டம் லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 29 அன்று நடைபெறவுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தின்போது, இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலாவது பாண்டியா அணிக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அவரது உடல்நிலை குறித்து, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், தனது கணுக்காலில் முதல் தர தசை கிழிவை ஹர்திக் பாண்டியா சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஹர்திக் பாண்டியா உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்டுள்ள தசை கிழிவு, முழுமையாக குணமடைய 2 வாரங்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், தசை கிழிவில் இருந்து ஹர்திக் பாண்டியா குணமடைந்தாலும், மீண்டும் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு உடல் தகுதி பெற மேலும் சில நாட்கள் ஓய்வு தேவைப்படும். இதனால், இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களிலும் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் தான்.
பெறும் சிக்கலில் இந்தியா..
பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 பிரிவுகளிலும், ஹர்திக் பாண்டியா திறம்பட செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கான மாற்று வீரரை அடையாளம் காண இந்திய அணி திணறி வருகிறது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் அணிக்கான 6வது பவுலர் என 2 இடங்களிலும் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், தற்போது அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பியூர் பேட்ஸ்மேனாக இருக்கும் பட்சத்தில், அந்த 6வது பவுலர் இல்லாமல் இந்திய அணி தவித்து வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், 5 பவுலர்களை கொண்டே களமிறங்கிய இந்திய அணி, கடைசி வரை போராடியே வெற்றியை சுவைக்க முடிந்தது.
இதனால், டாப் ஆர்டரில் உள்ள ரோகித் சர்மா அல்லது விராட் கோலியை, ஆட்டத்தில் ஒரு சில ஓவர்கள் பந்துவீசவைக்க, இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில், ஹர்திக் பாண்டியா காயமடைந்து வெளியேறியபோது, விராட் கோலியே அவரது ஓவரை பூர்த்தி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
தேவர் நினைவிடத்தில் இரு மணிமண்டபம்!
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
ஸ்டாலின் திமுகவுக்கு மட்டுமே முதல்வராக உள்ளார்: மத்திய பாஜக குழு!