ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை தொடரில் இன்று (ஜூன் 1) இரவு நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி தனது பரமவைரியான பாகிஸ்தானுடன் மோதுகிறது.
நடப்பாண்டுக்கான ஆடவர் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை தொடர் ஓமனில் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில், நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சைனீஸ் தைபே ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் மலேசியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஓமன், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றன.
இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியாவும், பாகிஸ்தானும் லீக் போட்டிகளில் ஒருமுறை கூட தோற்கவில்லை.
ஒரே பிரிவில் இடம்பெற்ற இரு அணிகளும் கடந்த மாதம் 27ஆம் தேதி மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ள பாகிஸ்தானை விட 11 கோல் வித்தியாசத்தில் இருந்ததால் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
நடப்பு சாம்பியனான இந்திய ஹாக்கி அணி தனது லீக் ஆட்ட்த்தில் சீன தைபே அணியை 18-0, ஜப்பானை 3-1 மற்றும் தாய்லாந்தை 17-0 என்ற கோல்கள் கணக்கிலும் வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியா 9-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தியது.
அதேவேளையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி அதன் தொடக்க ஆட்டத்தில் சீனா தைபேயை 15-1, தாய்லாந்தை 9-0 மற்றும் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. அரையிறுதியில் மலேசியாவை 6-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
இதனையடுத்து பலம் வாய்ந்த இந்தியாவும், பாகிஸ்தானும் ஜூனியர் ஹாக்கி ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 4வது முறையாக இன்று மோத உள்ளன. இந்த ஆட்டம் சலாலா விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக நடைபெற்ற 3 இறுதிப்போட்டிகளில், 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானும், 2004 மற்றும் 2015 ஆண்டுகளில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
கோவிட் காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற இருந்த தொடர் ரத்து செய்யப்பட்டது.
இதனால் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஓமனில் நடைபெற்று வரும் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் ஒரு முறை மோதுகின்றன.
ஆசிய கண்டத்தில் சமபலம் வாய்ந்த இருபெரும் அணிகள் மோதும் ஆட்டம் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியை இந்தியாவில் watch.hockey இணையதளத்தின் மூலம் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
கிறிஸ்டோபர் ஜெமா
மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு!
இலங்கை அணியில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்!