ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஐசிசி டி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது.
ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி தங்களின் திறமைகளை வெளிக்காட்டும் வீரர்கள், தங்களது சொந்த நாட்டுக்காக உலக கோப்பையை வெல்ல முழு மூச்சுடன் விளையாடுவார்கள் என்பதால் இத்தொடரில் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.
அந்த வகையில் மெல்போர்ன், சிட்னி போன்ற முன்னணி நகரங்களில் நடைபெற இருக்கும் இத்தொடரில் சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக கோப்பையை தக்கவைக்க களமிறங்கும் ஆஸ்திரேலியாவுக்கு,
சவாலாக உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இந்த முறை கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இப்படி அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ள இத்தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற கணிப்பை அவ்வப்போது பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் பெவன் தங்களது நாட்டில் நடைபெறும் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.
இதுபற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியபோது, “என்னை பொறுத்தவரை இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.
அதிலும் குறிப்பாக தற்சமயத்தில் ஃபார்மில் இருக்கும் அணி என்று பார்த்தால் இந்தியாவை நான் தேர்வு செய்வேன்.
அதே சமயம் நட்சத்திர வீரர்களையும் திறமையான வீரர்களையும் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் அடுத்தடுத்த உலக கோப்பைகளை வெல்வதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
தற்போதைய நிலைமையில் இந்த 3 அணிகளும் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்