இந்தியா Vs மேற்கிந்தியா: ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!
மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா – மேற்கிந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (ஜூலை 24) நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளராக அவேஷ்கான் இடம்பிடித்தார். ‘டாஸ்’ ஜெயித்த மேற்கிந்திய கேப்டன் நிகோலஸ் பூரன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
இதன்படி விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பும், கைல் மேயர்ஸும் அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். அணிக்கு வலுவான அடித்தளம் உருவாக்கிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேகரித்தனர். மேயர்ஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷமார் புரூக்ஸ் 35 ரன்களும், பிரான்டன் கிங் ரன் ஏதுமின்றியும் நடையை கட்டினர்.
நான்காவது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் நிகோலஸ் பூரன் கைகோர்த்து அணியை வலுவான நிலைக்கு பயணிக்க வைத்தனர். பூரன் தனது பங்குக்கு 74 ரன்கள் (77 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) திரட்டினார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷாய் ஹோப் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் சிக்சர் விரட்டி தனது 13ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு இது 100ஆவது ஒரு நாள் போட்டியாகும். 100ஆவது ஆட்டத்தில் செஞ்சுரி அடித்த பத்தாவது வீரராக சாதனை பட்டியலில் இணைந்தார்.
ஷாய் ஹோப் 115 ரன்கள் (135 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கினார். முடிவில் அகேல் ஹூசைன் 6 (4) ரன்களும், ரோமோரியோ ஷெப்பர்டு 15 (11) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளும், தீபக் ஹூடா, அக்சர் படேல் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் சார்பில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியில் ஷிகர் தவான் 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில்லுடன் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் நிதான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் மெல்ல உயர்ந்த நிலையில் சுப்மன் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் சோபிக்க தவறினார். அவர் 9 ரன்னில் வெளியேறினார்.
அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியில் அரை சதத்தை பதிவு செய்து விளையாடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் 63 (71) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சனும் அரைசதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 54 (51) ரன்களில் ரன் அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கி ரன் குவிப்பில் ஈடுபட்ட தீபக் ஹூடா 33 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 3 ரன்களும், அவேஸ் கான் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட அக்ஷர் பட்டேல் தனது அரை சதத்தை பதிவு செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ரன்கள் தேவைப்பட்டநிலையில் இரண்டு ரன்கள் ஓடி எடுத்த நிலையில், கடைசி 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அக்ஷர் பட்டேல் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஷர் பட்டேல் 64 (35) ரன்களும், முகமது சிராஜ் ஒரு ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 49.4 ஒவர்களில் இந்திய அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக கெயில் மேயர்ஸ் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஜெய்டன் சீல்ஸ், ஷெப்பர்டு மற்றும் அகேல் ஹூசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. மேற்கிந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிகணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 27 (புதன்கிழமை) நடைபெறுகிறது.
– ராஜ்