ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு திருவிழாவில் இன்று (செப்டம்பர் 25) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணி மோதின.
முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஷபாலி வர்மா எதிர்பார்த்த துவக்கத்தை அளிக்காத நிலையில், 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா – ஜெமிமா ரோட்ரிக்ஸ், நிதானமாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 73 ரன்களை குவித்தது.
ஸ்மிருதி மந்தனா 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இவர்களுக்கு பிறகு யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது இந்திய அணி.
தொடர்ந்து 117 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு, துவக்கத்திலேயே டிடாஸ் சாது அதிர்ச்சி அளித்தார்.
இவரது பந்துவீச்சில், இலங்கையின் டாப்-ஆர்டர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 14-3 என்ற நிலையை அடைந்தது.
அதன் பிறகு களமிறங்கிய ஹாசினி பெரேரா (25 ரன்கள்), நிலாக்சி டி சில்வா (23 ரன்கள்), ஓஷடி ரணசிங்கே (19 ரன்கள்), சில அதிரடி ஷாட்களை ஆடி, இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தாலும், அது அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே அடிக்க, இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், இந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2வது தங்கத்தை இந்தியா கைப்பற்றியது. வெள்ளிப் பதக்கத்தை இலங்கை வென்றது.
3வது இடத்திற்காக இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வங்கதேசம் வெண்கல பதக்கத்தை தன்வசமாக்கியது.
2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில், இதுவரை இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது.
முரளி
புதுச்சேரி பாஜக தலைவர் மாற்றம்!
கூட்டணிச் சண்டை… பாஜக தலைமைக்கு வாசன் அனுப்பிய அவசர செய்தி!
உதயநிதியின் சனாதன பேச்சு : டெல்லியில் சாமியார்கள் ஆர்ப்பாட்டம்!