இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் நிஸ்ஸாங்க, அஜந்தா மெண்டிஸ் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இதனால் இலங்கை அணி 6 ஓவர் முடிவில் 50 ரன்களை கடந்தது.

நிதானமாக ஆடி வந்த நிஸ்ஸாங்க, மெண்டிஸ் கூட்டணியை சாஹல் முறியடித்தார். சாஹல் பந்து வீச்சில் மெண்டிஸ் எல்பிடபுள்யூ ஆனார்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய பனுகா, பதும் நிஸ்ஸாங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளும், சாஹல் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியில் இஷான் கிஷன், சுப்மான் கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். 2-ஆவது ஓவரில் கசுன் ரஜிதா பந்துவீச்சில் இஷான் கிஷன் அவுட் ஆகி இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. 10 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடி வந்தார். 16 வது ஓவரில் 51 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். இறுதியில் அக்சர் பட்டேல் மற்றும் ஷிவம் மவி இந்திய அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார்.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர்களால் 4 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் மற்றும் ஷிவம் மவி இருவரும் அவுட் ஆனார்கள். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணி தரப்பில் தசுன் ஷாங்கா, கசுன் ரஜிதா, திஷன் மடுஷாங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் டி20 தொடர் 1-1 என்று சமநிலை வகிக்கிறது.
செல்வம்