U19 World Cup: ‘நாங்க வேற மாதிரி’ 5-வது முறையாக… இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

Published On:

| By Manjula

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று (பிப்ரவரி 6) துவங்கின.

முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணியும், தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்க அணியும் மோதிக்கொண்டன.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, துவக்கத்திலேயே ராஜ் லிம்பனியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி, முதல் 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆனால், 3-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த லஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் ரிச்சர்ட் செலேட்ஸ்வானே அணிக்கு தேவையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

லஹான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களுக்கும், ரிச்சர்ட் செலேட்ஸ்வானே 64 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இறுதியில் கேப்டன் ஜுவான் ஜேம்ஸ் மற்றும் ட்ரிஸ்ட்டின் லஸ் ஆகியோரின் அதிரடியால், தென் ஆப்பிரிக்க அணி 244 ரன்களை சேர்த்தது.

இந்தியாவுக்காக ராஜ் லிம்பனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தது.

ட்ரிஸ்ட்டின் லஸ் மற்றும் க்வேனா மபாகா ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

ஆனால்,5-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் உதய் சாஹரன் மற்றும் சச்சின் தாஸ், இந்திய அணிக்கு ஒரு திடமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, சீரான வேகத்தில் ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி 5-வது விக்கெட்டிற்கு 171 ரன்களை குவித்தது. இவர்களின் அதிரடியால், 49-வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி, 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தனது சிறப்பான ஆட்டத்திற்காக, இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். நாளை (பிப்ரவரி 8) நடைபெறவுள்ள 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இதில் வெற்றி பெறும் அணியுடன், இந்திய அணி இறுதிப்போட்டியில் வருகின்ற பிப்ரவரி 11-ம் தேதி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகன் பற்றிய தகவல்… ஒரு கோடி சன்மானம்: சைதை துரைசாமி உருக்கமான அறிவிப்பு!- தொடரும் தேடுதல் பணி!

மோடியின் உரை… விஜய் புதுக் கட்சி: ஸ்டாலின் இன்ட்ரஸ்டிங் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel