மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நேற்று (பிப்ரவரி 12 ) விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 12 ரன்களுக்கும், ஜவேரியா கான் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த நிதார் தார் (0), அமீன் (11) அவுட்டாக 68 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது.
எனினும் , அந்த அணிக்கு கேப்டன் மரூஃப் மற்றும் ஆயிஷா நசீம் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மரூஃப் (68) – ஆயிஷா (43) ரன்களும் கடைசி நேரத்தில் அடிக்க 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது.
150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா 33 ரன்களும், யஸ்டிகா பாட்டியா 17 ரன்களும் அடித்தனர்.
3ம் வரிசையில் இறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 38 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 5ம் வரிசையில் இறங்கிய ரிச்சா கோஷ் 20 பந்தில் 31 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
19 வது ஓவரில் இலக்கை அடைந்த இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?