2023 ஒருநாள் உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிக்ஸர் மழையில் நனைய வைத்த இந்தியா
இதை தொடர்ந்து, துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா, துவக்கத்திலிருந்தே அதிரடி காட்டி, 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – விராட் கோலி, சீரான வேகத்தில் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். ஆனால், எதிர்பாராத விதமாக 65 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்திருந்தபோது, வெப்ப அலையினால் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சுப்மன் கில் ஒய்வு பெற்று வெளியேறினார்.
அதை தொடர்ந்து இணைந்த விராட் கோலி – ஷ்ரேயஸ் அய்யர், வேறுமாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருபுறத்தில் விராட் நிதானமாக விளையாடி ரன் சேர்க்க, மறுபுறத்தில் ஷ்ரேயஸ் சிக்ஸர்களை பறக்கவிட்டார். தனது பொறுப்பான ஆட்டத்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி, 117 (113) ரன்களுக்கு வெளியேற, மறுமுனையில் 8 சிக்ஸ்களுடன் 70 பந்துகளில் 105 ரன்கள் குவித்து ஷ்ரேயஸ் அய்யர் ஆட்டமிழந்தார்.
கடைசியில் வந்த கே.எல்.ராகுல் 20 பந்துகளில் 39 ரன்களை குவிக்க, இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் சேர்த்திருந்தது. நியூசிலாந்து அணிக்காக டிம் சவுதி 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெரில் மிட்சல்
398 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா, 10 ஓவர்களுக்குள்ளேயே முகமது ஷமியின் பந்துவீச்சில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறினர்.
ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் – டெரில் மிட்சல், அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணிக்காக ரன்களை குவித்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் இந்திய அணி திணறியபோது, மீண்டும் 33வது ஓவரில் தாக்குதலுக்கு வந்த முகமது ஷமி, கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார். வில்லியம்சன் 69 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதே ஓவரில் டாம் லாதமையும் ஷமி வெளியேற்றினார்.
அதன்பின், அடுத்த சில ஓவர்களுக்கு நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பு வேகம் குறைந்த நிலையில், கிளென் பிலிப்ஸுடன் இணைந்து மீண்டும் பவுண்டரிகளை விளாச துவங்கினார், டெரில் மிட்சல். கிளென் பிலிப்ஸும் அதிரடி காட்ட துவங்கினார்.
ஆனால், 43வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் 41 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து கிளென் பிலிப்ஸ் வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே, புதிதாக களமிறங்கிய மார்க் சாப்மனின் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து, அடுத்தடுத்து நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்களை பறிகொடுத்து வெளியேற, அந்த அணி 327 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, முதல் அணியாக 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. முகமது ஷமி 7 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சேதமடைந்த ஐபோன்: பணத்தை திருப்பி செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவு!
ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!