இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று(ஜனவரி 29) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன், டெவான் கான்வே ஆகிய இருவரும் தலா 11ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்சல் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் நியூசிலாந்து அணியை 99ரன்களுக்குள் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சுருட்டினர்.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2விக்கெட்டுகளும், யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் தலா 1விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
100ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு ஏற்றதாக இருந்ததால், இந்திய அணி வீரர்கள் குறைவான ரன் இலக்கை அடைய திணறினர்.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மான் கில், இஷான் கிஷன் களமிறங்கினர். சுப்மான் கில் 11ரன்களிலும், இஷான் கிஷன் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா கூட்டணி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சூர்யகுமார் யாதவ் 26ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 19ரன்களுடனும் கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் ஆடினர்.
இதனால் இந்திய அணி 19.5ஓவர்களில் 4விக்கெட் இழப்பிற்கு 101ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனால் டி20 கிரிக்கெட் தொடர் 1-1என்று சமநிலை வகிக்கிறது. இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
செல்வம்
தைப்பூசம்: பழனி முருகன் கோவிலின் சிறப்பு பூஜைகள்!
அதானி குழுமத்தால் நட்டத்தில் எல்ஐசி, எஸ்பிஐ : காங்கிரஸ் கடும் தாக்கு