இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்கள், ஸ்ரேயாஸ் 86 ரன்கள் எடுத்திருந்தனர்.

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 55.5 ஓவர்களில் 150 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் மற்றும் புஜாரா சதமடித்தனர். இதனால் இந்திய அணி வங்கதேசத்திற்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
2-வது இன்னிங்சில் ஆடிய வங்கதேச அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக ஆடிய சஹிர் ஹசன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டமுடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி 272 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று நடைபெற்ற 5-வது நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நம்பிக்கையுடன் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது. வங்க தேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவைப்பட்டது.

இன்று ஆட்டம் துவங்கியதும் நிலைத்து நின்று ஆடிய ஷகிப் அல் ஹசன் 84 ரன்களில் குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் அக்ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
செல்வம்
வாட்ச் விவகாரம்: சொத்து விவரங்களை வெளியிட தயார் – அண்ணாமலை
“திமுக அரசு மக்களை வாட்டி வதைக்கிறது” – ஓபிஎஸ்