ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இமாலய இலக்கு வைத்த இந்திய அணி பல்வேறு அதிரடியான சாதனைகளை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 24) மதியம் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
போட்டிபோட்டு சதமடித்த ஸ்ரேயாஸ், கில்!
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ருத்துராஜ் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹசில்வுட் பந்தில் அலெக்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர், கில்லுடன் சேர்ந்து அதிரடியான பேட்டிங்கை கையிலெடுத்தார்.
37 பந்துகளில் சிக்ஸருடன் கில் அரைசதம் அடித்தார். அவரைத்தொடர்ந்து 41 பந்துகளில் ஸ்ரேயாஸும் சிக்ஸருடன் அரைசதம் கடந்தார்.
பின்னர் இருவரும் தங்களை அதிரடி ஆட்டத்தை வேகப்படுத்திய நிலையில், சிக்ஸர், பவுண்டரியாக பறக்கவிட்ட ஸ்ரேயாஸ் ஒருநாள் போட்டியில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அப்பாட் பந்தில் மேத்யூவிடம் கேட்ச் கொடுத்து 105 ரன்களில் வெளியேறினார்.
அவரைப்போலவே தனது 6வது ஒருநாள் சதத்தை அடித்த சுப்மன் கில், கிரீன் பந்தில் கேரியிடம் கேட்ச் கொடுத்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமாரின் ருத்ரதாண்டவம்!
அடுத்தடுத்து இரு வீரர்கள் ஆட்டமிழந்தாலும், அடுத்த வந்த இந்திய வீரர்கள் யாருமே அதிரடி ஆட்டத்தை விட்டுக்கொடுக்கவில்லை.
அதன்படி, அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 31 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 38 பந்துகளில் 52 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதற்கிடையே களமிறங்கிய இந்தியாவின் 360 சூர்யகுமார் யாதவ் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மாறி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து பக்கங்களுக்கும் சிதறடித்தார்.
குறிப்பாக கேமரூன் க்ரீன் வீசிய 44வது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆஸ்திரேலியாவின் பலத்தை பஞ்சராக்கினார்.
6⃣6⃣6⃣6⃣
The crowd here in Indore has been treated with Signature SKY brilliance! 💥💥#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank | @surya_14kumar pic.twitter.com/EpjsXzYrZN
— BCCI (@BCCI) September 24, 2023
கடைசிவரை தனது அதிரடியை தொடர்ந்து அவர் 24 பந்துகளில் அடித்த அரைசதத்துடன் 72 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா 13 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா அணிக்கு 400 ரன்கள் என்னும் இமாலய இலக்கை வைத்தனர்.
எனினும் பெரும் நெருக்கடிக்கிடையே தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர்(53) தவிர மற்ற வீரர்கள் சீட்டுகட்டுகளை போல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இடையே பெய்த மழையின் காரணமாக டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆட்டம் 33 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆஸ்திரேலியா அணிக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் முதலிலேயே அதிகளவில் விக்கெட்டுகள் இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது, 9வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அபாட் அபாரமாக விளையாடி அரைசதம் (54) அடித்து ஆட்டமிழந்தார். எனினும் அவருக்கு யாரும் துணையாக நிற்கவில்லை.
இதனால் 28.2 ஓவர் முடிவில் 217 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிரஷித் கிருஷ்ணா 2, முகமது ஷமி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
Two wickets in an over for @ashwinravi99 💪💪
David Warner and Josh Inglis are given out LBW!
Live – https://t.co/OeTiga5wzy… #INDvAUS @IDFCFIRSTBank pic.twitter.com/z62CFHTgq1
— BCCI (@BCCI) September 24, 2023
சாதனை படைத்த இந்தியா
தனது சொந்த மண்ணில் இந்தாண்டு உலகக்கோப்பையை சந்திக்க உள்ள இந்திய அணிக்கு இது முக்கியமான ஆட்டம். இந்த நிலையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
*இந்த போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3,000 சிக்ஸர்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி இன்று பெற்றுள்ளது.
*மேலும் 5வது முறையாக மீண்டும் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்களை (18) பதிவு செய்துள்ளது இந்தியா.
*ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதன்முறையாக பெரிய இலக்கை (399/5) பதிவு செய்துள்ளது இந்தியா.
முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு குவித்திருந்தது.
*கேமரூன் க்ரீனுக்கு எதிராக 4 சிக்ஸர்களை விரட்டியதன் மூலம் ஆஸ்திரேலியா அணி வீரரின் ஒரு ஓவரில் 2வது முறையாக அதிக ரன்கள்(26) குவிக்கப்பட்டுள்ளது.
*இந்த போட்டியில் 2 விக்கெட்டுக்கு 103 ரன்களை கொடுத்து ஆஸ்திரேலியாவின் மிக மோசமான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 3வது இடம்பிடித்துள்ளார் க்ரீன்.
*இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களை (2/103) கொடுத்த முதல் ஆஸ்திரேலிய பவுலர் என்ற மோசமான சாதனையையும் கேமரூன் க்ரீன் படைத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’பாக்சிங்… ஒரே நாளில் சீமான் தோத்துட்டாரு’: வீரலட்சுமி அறிவிப்பு!
அதிமுகவோட அப்டேட் குமாருக்கு இந்த அப்டேட் குமாரு பதில்!
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த ரஜினி ரசிகர்கள்!