இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.
முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் சமநிலை வகித்ததால் கோப்பையை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.
நேற்று (செப்டம்பர் 25) ஹைதராபாத்தில் நடைபெற்ற கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினர்.
7 ரன்களில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, கேமரூன் கிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து வெளியேறினர்.
டிம் டேவிட் மற்றும் டேனியல் சாம்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணி பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். புவனேஸ்குமார், ஹர்சல் பட்டேல், சாஹல் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.
கே.எல் ராகுல் ஒரு ரன்னில் அவுட்டாகி இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்தாக விராட்கோலி களமிறங்கினார்.
நிதானமாக விளையாடி வந்த ரோகித் சர்மா 17 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இதனால் பரபரப்பாக காணப்பட்ட ஆடுகளத்தில் கோலி, சூர்யகுமார் ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்
36 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 69 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் கோலி தனது அரை சதத்தை பதிவு செய்து, ஹர்திக் பாண்ட்யாவுடன் ஆடினார்.
ஹர்திக் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 63 ரன்களோடு வெளியேறினார்.
தினேஷ் கார்த்திக்குடன் கைகோர்த்த ஹர்திக் பாண்ட்யா கடைசி 2 பந்துகளுக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடித்து அசத்தினார்.
இதனால் இந்தியா 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து, 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டி20 கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள், டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகள், ஹேசில் வுட், பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
செல்வம்
இங்கிலாந்து மகாராணி மரணமும், இந்தியாவின் வாரிசு அரசியல் தலைமை பிரச்சினையும்…
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!