வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவ்வணி இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ்வணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி சட்டோகிராமில் தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.
அதன்படி, டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ரிஷாப் பண்ட் 46 ரன்களும், ஸ்ரேயாஸ் 86 ரன்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, இந்திய அணியின் வேக மற்றும் சுழல் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலை பெற்றதால், ஃபாலோ ஆன் ஆனது வங்கதேச அணி. இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும் எடுத்தனர்.
எனினும், அந்த அணியை தொடர்ந்து பேட்டிங் செய்யவிடாமல் 2வது இன்னிங்ஸிலும் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்திய அணி. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து, வங்கதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதில், சுப்மான் கில் (110 ரன்கள்) மற்றும் புஜாரா (102 ரன்கள்) செஞ்சுரி அடித்தனர். இதைத் தொடர்ந்து மூன்றாம் நாளான நேற்று (டிசம்பர் 16) விளையாடிய வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்திருந்தது. அவ்வணியின் ஷாண்டோ 25 ரன்களும், ஹாசன் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இதில், ஹாசன் நிலைத்து நின்று சதம் (100 ரன்கள்) அடித்தார். மற்றொரு வீரரான ஷாண்டோ 67 ரன்களில் வெளியேறினார். அவர்களைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

இறுதியில் அவ்வணி, 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. அல் ஹாசன் 40 ரன்களுடனும், மெஹிடி ஹாசன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் இறுதி நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 90 ஓவர்களில் 241 ரன்கள் எடுக்க வேண்டும்.
கைவசம் 4 விக்கெட்கள் இருப்பதால், அந்த அணி அடித்து ஆட முற்படும் அல்லது டிரா செய்யக்கூட முயலும். அதேநேரத்தில், ஒருநாள் தொடரில் இழந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி தர வேண்டுமென்றால், அவர்களது வெற்றியைப் பறிக்க இந்தியா வியூகங்களை வகுக்க வேண்டும்.
ஜெ.பிரகாஷ்
கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நெய்மர்: ஏன் தெரியுமா?
பில்கிஸ் பானு மனு தள்ளுபடி: இதுவரை நடந்தது என்ன?