இந்திய அணியின் பந்துவீச்சாளர்களிடம் வங்கதேச பேட்டர்கள் சரணடைந்ததால், அந்த அணி குறைவான ரன்னையே எடுத்துள்ளது.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ்வணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் லோகேஷ் ராகுல் அணிக்கு தலைமை தாங்கினார்.
அதன்படி, டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ராகுல், சுப்மான் கில், விராட் கோலி, அக்ஸர் படேல் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, புஜாரா, ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாண்டனர். அதன் பயனாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னங்ஸில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்திருந்தது.
இதில் அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ரிஷாப் பண்ட் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார். வங்கதேச அணியில் தயுசூல் இஸ்லாம் 3 விக்கெட்களையும், மெஹிடி ஹசன் 2 விக்கெட்களையும் அகமது 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்த நிலையில், இன்று (டிசம்பர் 15) இரண்டாவது நாள் தொடங்கியது.
82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் இன்றைய போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், 86 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். என்றாலும், அதன்பின் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் ஜோடி நிதானமாக ரன்களை சேர்ந்தனர். 8வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து குல்தீப் 40, முகமது சிராஜ் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து, இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணி தரப்பில் இஸ்லாமும் ஹசனும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். ஹொசைன் மற்றும் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
தொடர்ந்து, களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தது. வங்கதேச அணியின் இன்னிங்ஸில் முதலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினார்கள். முதல் 4 விக்கெட்டுகளில் மூன்று சிராஜுக்கும் ஒரு விக்கெட் உமேஷ் யாதவுக்கும் கிடைத்தன. இதன்பிறகு குல்தீப் யாதவின் பந்துவீச்சில் வங்கதேச பேட்டர்கள் சரணடைந்தனர்.
அவர், அடுத்த 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனால் 102 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேச அணி. 2ஆம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
மெஹித் ஹசன் 16, எபடாட் 13 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். குல்தீப் யாதவ் 4, சிராஜ் 3, உமேஷ் யாதவ் 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 271 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளை 3ஆம் நாள் நடைபெற உள்ளது.
ஜெ.பிரகாஷ்
முத்து வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர்: சந்தோஷத்தில் ராஜமெளலி
உள்ளாட்சி அமைப்பின் நிதி அதிகாரம்: உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!