சுலபமான இலக்கு: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

Published On:

| By Prakash

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணிக்கு மிகச் சுலபமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மிர்பூரில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எனினும், இந்திய அணியின் மிரட்டல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணி தடுமாறியது. இறுதியில், அந்த அணி முதல் இன்னிங்ஸில் முதல் நாளிலேயே 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே நடையைக் கட்டியபோதும், ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தூணாய் நின்று இந்திய அணியை நிமிர்த்தினர். அவர்களுடைய ரன் வேட்டையால் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் பண்ட் 93 ரன்களும், ஸ்ரேயாஸ் 87 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி, 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்களும், ஜாகீர் ஹசன் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், உனட்கட் 3 விக்கெட்களையும் அஸ்வின் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 145 ரன்களை வங்கதேச அணி நிர்ணயித்தது. மிகச் சுலபமான வெற்றி இலக்கைக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி இன்றைய போட்டியின் இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை எடுத்துள்ளது.

இன்னும் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நாளைய ஆட்டம் தொடர உள்ளது. இந்தப் போட்டியிலும் முன்னணி வீரர்கள் நடையைக் கட்டியுள்ளனர். அதிகபட்சமாக அக்ஸர் படேல் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

”ராகுலின் யாத்திரை அடுத்து வரும் ஒளிமயமான தலைமுறைக்கானது!” – கமல்

இனி நிறைய செய்ய வேண்டியுள்ளது: விடுதலையான சார்லஸ் சோப்ராஜ்