இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அவ்வணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நேற்று (டிசம்பர் 22) தொடங்கியது. இந்திய அணி தரப்பில் கடந்த போட்டியில் ஜொலித்த குல்தீப் யாதவ் நேற்றைய போட்டியில் நீக்கப்பட்டார்.
அவர்களுக்குப் பதிலாக அதிகளவில் வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறக்கப்பட்டனர். இதையடுத்து, டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
என்றாலும், இந்திய அணியின் மிரட்டல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணி தடுமாறியது. இறுதியில், அந்த அணி முதல் இன்னிங்ஸில் முதல் நாளிலேயே 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேச தரப்பில், மொமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளையும் உனாட்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 14 ரன்களுடனும், ராகுல் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களிலேயே நடையைக் கட்டினர்.

குறிப்பாக ராகுல் (10 ரன்கள்), ஷுப்மன் கில் (20 ரன்கள்), புஜாரா (24 ரன்கள்), விராட் கோலி (24 ரன்கள்) ஆகியோர் நடையைக் கட்டினர். அதற்குப் பிறகு களமிறங்கிய ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தூணாய் நின்று இந்திய அணி அதிக ரன்கள் எடுக்க வழிகாட்டினர்.
பண்ட் 93 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் 87 ரன்கள் எடுத்தார். அவர்களுக்குப் பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களிலேயே பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி, இரண்டாவது நாளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது.
வங்கதேசம் தரப்பில், இஸ்லாம் மற்றும் அல் ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அகம்மது மற்றும் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பின்னர், இரண்டாவது நாளில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி, விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறும்.
ஜெ.பிரகாஷ்
கரும்பை வழங்கி உழவர்கள் வாழ்வில் ஒளியேற்றுக: ராமதாஸ் வலியுறுத்தல்!