இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி 227 ரன்களுக்குச் சுருண்டது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவ்வணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று (டிசம்பர் 22) தொடங்கியது. இந்திய அணி தரப்பில் கடந்த போட்டியில் ஜொலித்த குல்தீப் யாதவ் இன்றைய போட்டியில் நீக்கப்பட்டார். இந்த ஆடுகளத்தில் புற்கள் நிறைந்திருப்பதால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, டாஸ் ஜெயித்த வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் நாள் உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 82 ரன்கள் எடுத்தது. பல வருடங்களுக்குப் பிறகு தனது 2வது டெஸ்டை விளையாடும் உனாட்கட், முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். ஜாகீர் ஹசனின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து ஷான்டோ விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு வங்கதேச அணியின் விக்கெட்கள் சரியத் தொடங்கின. உமேஷ் யாதவ் ஷகில் அல் ஹசனை வீழ்த்த, முஷ்ஃபிகுர் ரஹிமை உனாட்கட் வீழ்த்தினார். இவர்களுக்குப் போட்டியாக அஸ்வின், லிட்டன் தாஸை வீழ்த்தினார். தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச அணி தடுமாறியது.
இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில், கடைசி 5 விக்கெட்டுகளை 14 ரன்களுக்குள் வீழ்த்தியது இந்தியா. வங்கதேச தரப்பில், மொமினுல் ஹக் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளையும் உனாட்கட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 14 ரன்களுடனும், ராகுல் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நாளை இதன் ஆட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
ஜெ.பிரகாஷ்
ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்!
அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!